Wednesday, November 19, 2008

வாரணம் ஆயிரம்

அன்புக்குரிய அப்பாவின் அந்திம செய்தி கேட்டு அவரை பற்றிய நினைவுகளை அசைபோடும் மகனின் கதைதான் வாரணம் ஆயிரம்.தந்தை மகன் என இருவேடங்களில் சூர்யா. தந்தை வேடத்தில் வரும் சூர்யா, சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்து கரம் பிடிக்கிறார். தன்வாழ்நாள் இறுதிவரை மனைவியை மிகவும் தீவிரமாக காதலித்தவண்ணம் உள்ளார். மகன் சூர்யா, தந்தை வழியில் கல்லூரி மாணவி ஷமீரா ரெட்டியை காதலிக்கிறார். இதற்காக அவரை அமெரிக்காவரை பின்தொடர்ந்து செல்கிறார். ஆனால் அரும்பிய காதல் மலர்வதற்குள் ஷமீரா வெடிகுண்டுக்கு இரையாகிறார். காதலியின் பிரிவு துயர் தாங்காத சூர்யா, போதையின் பாதையில் பயணமாகிறார். பிறகு தன்தவறை உணர்ந்து மறுபிறவி எடுத்தது போல் ராணுவ மேஜராக பணியில் அமர்கிறார். தீவிரவாதிகளை வேட்டையாட ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார் சூர்யா. அப்போது தந்தை மரணமடைந்ததாக தகவல் கிடைக்கிறது. தன்வாழ்நாளெல்லாம் ஒரு வழிகாட்டியாய், நண்பனாய் உடன் வந்த தந்தையை பற்றிய தருணங்களை நினைவுகூர்கிறார் சூர்யா. காற்றில் கலந்துவிட்ட போதும், கேசங்கள் கலையும் போதெல்லாம் அவர் விரல்கள் கோதுவதாகவே கருதியபடி மகன்சூர்யா நடைபோடுவதோடு படம் நிறைவடைகிறது. 1970 காலகட்டத்து இளைஞனாகவும், 1990கள் காலகட்டத்து இளைஞனாகவும் இருவேறு பாத்திரப்படைப்புகளில் தன்னை வித்தியாசம் காட்டி புருவம் உயர்த்த செய்துள்ளார் சூர்யா. அதே போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவராக பேச முடியாமல் நா குழறியபடி தடுமாறும் போது அவரது நடிப்பிற்கு தாராளமாக ஒரு சல்யூட் வைக்கலாம்.பதின்ம வயது துறுதுறு இளைஞனாக வரும் அதே சூர்யா, தடந்தோள் உயர்த்தி மலையென தோற்றமளிக்கும் ஆஜானுபாகுவான உடலுடனும் அசத்துகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை தாராளமாக சிம்ரனுக்கு தரலாம். உணவருந்தியபடியே அவர் பேசும் காட்சி சமீபத்திய படங்களில் இத்தனை சிறந்த முகபாவம் எதிலும் வந்ததில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. அழகு பதுமையாக வரும் ஷமீரா ரெட்டி அநியாயமாக இறந்து போகிறார். படத்தின் பெரும் பலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடார் இசைக் கருவியை இளையராஜா அளவுக்கு இதுவரை யாரும் கையாண்டதில்லை என்று கூறுவார்கள். அதனை இந்த படத்தில் தாண்டியுள்ளார் ஹாரிஸ். படம் முழுவதும் இசைதாண்டவமே ஆடியிருக்கிறார். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பார்த்தேன், அடியே கொல்லுதே போன்ற பாடல்கள் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கிறது. அதே போன்று ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத்தரம். ஆனால் இத்தனை நல்ல அம்சங்களையும் தனது திரைக்கதையால் போட்டு குழப்பி எடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். தனது தந்தைக்கு சமர்ப்பணம் என்ற உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இந்த படத்தை எடுத்துள்ளதால் கோர்வையாக அவரால் காட்சிகளை கொண்டுவர முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு செல்கிறது.இந்த குறையை நிவர்த்தி செய்திருந்தால் வாரணம் ஆயிரம், தாராளமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அள்ளியிருக்கும். அரவிந்த் குமார்

No comments: