Wednesday, November 19, 2008

வாரணம் ஆயிரம்

அன்புக்குரிய அப்பாவின் அந்திம செய்தி கேட்டு அவரை பற்றிய நினைவுகளை அசைபோடும் மகனின் கதைதான் வாரணம் ஆயிரம்.தந்தை மகன் என இருவேடங்களில் சூர்யா. தந்தை வேடத்தில் வரும் சூர்யா, சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்து கரம் பிடிக்கிறார். தன்வாழ்நாள் இறுதிவரை மனைவியை மிகவும் தீவிரமாக காதலித்தவண்ணம் உள்ளார். மகன் சூர்யா, தந்தை வழியில் கல்லூரி மாணவி ஷமீரா ரெட்டியை காதலிக்கிறார். இதற்காக அவரை அமெரிக்காவரை பின்தொடர்ந்து செல்கிறார். ஆனால் அரும்பிய காதல் மலர்வதற்குள் ஷமீரா வெடிகுண்டுக்கு இரையாகிறார். காதலியின் பிரிவு துயர் தாங்காத சூர்யா, போதையின் பாதையில் பயணமாகிறார். பிறகு தன்தவறை உணர்ந்து மறுபிறவி எடுத்தது போல் ராணுவ மேஜராக பணியில் அமர்கிறார். தீவிரவாதிகளை வேட்டையாட ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார் சூர்யா. அப்போது தந்தை மரணமடைந்ததாக தகவல் கிடைக்கிறது. தன்வாழ்நாளெல்லாம் ஒரு வழிகாட்டியாய், நண்பனாய் உடன் வந்த தந்தையை பற்றிய தருணங்களை நினைவுகூர்கிறார் சூர்யா. காற்றில் கலந்துவிட்ட போதும், கேசங்கள் கலையும் போதெல்லாம் அவர் விரல்கள் கோதுவதாகவே கருதியபடி மகன்சூர்யா நடைபோடுவதோடு படம் நிறைவடைகிறது. 1970 காலகட்டத்து இளைஞனாகவும், 1990கள் காலகட்டத்து இளைஞனாகவும் இருவேறு பாத்திரப்படைப்புகளில் தன்னை வித்தியாசம் காட்டி புருவம் உயர்த்த செய்துள்ளார் சூர்யா. அதே போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவராக பேச முடியாமல் நா குழறியபடி தடுமாறும் போது அவரது நடிப்பிற்கு தாராளமாக ஒரு சல்யூட் வைக்கலாம்.பதின்ம வயது துறுதுறு இளைஞனாக வரும் அதே சூர்யா, தடந்தோள் உயர்த்தி மலையென தோற்றமளிக்கும் ஆஜானுபாகுவான உடலுடனும் அசத்துகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை தாராளமாக சிம்ரனுக்கு தரலாம். உணவருந்தியபடியே அவர் பேசும் காட்சி சமீபத்திய படங்களில் இத்தனை சிறந்த முகபாவம் எதிலும் வந்ததில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. அழகு பதுமையாக வரும் ஷமீரா ரெட்டி அநியாயமாக இறந்து போகிறார். படத்தின் பெரும் பலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடார் இசைக் கருவியை இளையராஜா அளவுக்கு இதுவரை யாரும் கையாண்டதில்லை என்று கூறுவார்கள். அதனை இந்த படத்தில் தாண்டியுள்ளார் ஹாரிஸ். படம் முழுவதும் இசைதாண்டவமே ஆடியிருக்கிறார். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பார்த்தேன், அடியே கொல்லுதே போன்ற பாடல்கள் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கிறது. அதே போன்று ரத்னவேலுவின் ஒளிப்பதிவு உலகத்தரம். ஆனால் இத்தனை நல்ல அம்சங்களையும் தனது திரைக்கதையால் போட்டு குழப்பி எடுத்துள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். தனது தந்தைக்கு சமர்ப்பணம் என்ற உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இந்த படத்தை எடுத்துள்ளதால் கோர்வையாக அவரால் காட்சிகளை கொண்டுவர முடியவில்லை. இதனால் இரண்டாவது பாதி நம்மை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு செல்கிறது.இந்த குறையை நிவர்த்தி செய்திருந்தால் வாரணம் ஆயிரம், தாராளமாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அள்ளியிருக்கும். அரவிந்த் குமார்

சோம்பேறி

இந்த சோம்பேறிதனத்தால எவ்ளோ வேலைகள் வீணாக போகுது. தினமும் எதாவது எழுதனும் என்று நினைக்கிறேன். ஆனா முடியாம போகுது.மனசில் யோசிச்சு வச்சு இருக்குற விஷயங்கள் ஏராளம்.அதை எழுதினாலே நிச்சயம் யார் இவர் என்று அனைவரும் யோசிப்பார்கள். ஆனால் இந்த சோம்பேறிதனத்தால் தள்ளி கொண்டே போகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

Friday, November 7, 2008

உண்மை

வந்திங்கு பார்த்த பின்னர் புறஞ்
சென்றங்கு பொய் பேசுவர் தமை
கொன்றிங்கு போட்டால் தான் மெய்
வென்றிங்கு வாழும்.


பொய்நீக்கி மெய் பேசும் பண்புடையார் - தலை
கொய்வேனென்று ரைத்தாலும் உயிருக்கஞ்சி
தொய்வான முகத்தோடு வேறுமொழி பேசுவாரோ
பொய்பேசி உயிர்வாழின் அவ்வுயிர் வேண்டாம்மென்று அறியாரோ

யார் தமிழன் ?

வேல்பிடித்து போர்புரிந்த காலம் தொட்டே
கொள்கை பிடிப்பாய் சுற்றி வந்த கூட்டம் -இன்று
வால்பிடித்து வாழ்வதென்ன அவலம் - ஒரு
கோல் ஊன்றி வாழ்ந்தாலும் வாழலாம் - ஒரு
கொள்கையின்றி வாழ்வதுவும் வாழ்வா?.

எங்கடா வீழ்ந்தாய் தமிழா - நீ
ஏனடா சோர்ந்தாய் தமிழா - தமிழன்
மானத்திற்க்காய் மாண்டதை வரலாறு சொல்லும்
இன்றோ மாயைகளின் பிடியில் மாள்வதை
வரலாறு என்னவென்று கொள்ளும்.

ஆறாத ரணமாய் வலிக்குதடா தம்பி - இந்த
ஆரிய நாய்களை அடித்துவிடு எம்பி
ஆறப்போட்டு போருத்ததெல்லாம் போரும் - உன்
ஆற்றலையெல்லாம் இதுதான் கொண்டுவரும் நேரம்
உற்றத்துனை தமிழுண்டு ஆர்த்தெழுவாய் சிங்கமே

இன்னும் என்ன தயக்கம் - எதை
எண்ணி இந்த மயக்கம் - தொலைத்த
தமிழினத்தை தேடும் படலம் இது - இதை
தடுப்பவர் எவரையும் தொலைக்கும் படலம் இது
சடலமா நீ? சினங்கொள், சீறி எழு

தமிழர் தந்த பிள்ளைகள் நாம் - பிற
ஆரியர் ஆள்வதை பொறுப்பது தவறு
கூரிய முனை கொண்டு உன்னை குத்தி கொன்றாலும்
சீரிய சிந்தனை கொண்டு தமிழன்
உலகுக்கு சொல்லடா.

Tuesday, November 4, 2008

நேரம்

இந்த நேரத்தை எப்படி சரியாக கையாள்வது என்பது இன்று வரை கைவராத கலையாகவே இருக்கிறது. பத்து மணிக்கு ஒருவரை சந்திக்கிறேன் என்று சொன்னால் நிச்சயமாக பதினொன்று மணிக்கு தான் அந்த விசயமே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் பல நல்ல விஷயங்கள் இந்த நேரம் என்ற விஷயத்தாலேயே கை நழுவி போயுள்ளது. இன்று கூடஒரே சமயத்தில் மூன்று பேரை சந்திப்பதாக கூறிவிட்டு ஒருவரையும் சந்திக்காமல் வீட்டுக்கு செல்லவேண்டிய சூழல். என்ன செய்வது.?

Monday, November 3, 2008

காலத்தை வென்றவன் நீ


சாதாரண கவுன்சிலர் பதவிக்கே சட்டைய கிழித்து கொண்டு சண்டையை போடும் இந்தகாலத்தில் போட்டியிட்டால் முதல்வர் பதவி நிச்சயம் என்ற நிலையிலும் கூட அரசியல் வேண்டாம் என்ற திடமான முடிவை எடுத்த ரஜினியை பாராட்டாமல் இருக்க முடியாது. கோழை, சுயநலவாதி இப்படி பல பட்ட பெயர்கள் மாற்று ரசிகர்களால் அவருக்கு சூட்டப் பட்டாலும் இன்று அவரது முடிவு பல அரசியல்வாதிகளின் வயிற்றில் பாலை வாற்றி இருக்கிறது என்றால் அது மிகையல்ல . தெரியாத ஒன்றை செய்ய மாட்டேன் என்று சொல்லும் தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும்.? நாற்காலி கனவுகளில் மிதக்கும் அரசியல் நடிகர்களுக்கு மத்தியில் ரஜினியின் முடிவு துணிச்சலான ஒன்று. காலம் கட்டாயம் இதனை வரலாற்றில் பதிவு செய்யும்.

தலைவர் வழி தனி வழி

ரஜினி. ரசிகர்களை பொறுத்தவரை இது மந்திர சொல். தலைவா தலைமை ஏற்கவா என்று ரஜினி ரசிகர்கள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ரஜினி இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். சரவெடி கேள்விகளுக்கு சரமாரி பதில் அளித்து அசத்தினார். இது பற்றிய விரைவான பதிவு இன்னும் சிறுது நேரத்தில். . . .

Sunday, November 2, 2008

விடை பெற்றார் அனில்

1999 என்று நினைக்கிறேன்.பாகிஸ்தானோடு இந்திய பலபரிட்சை .அப்போது அடர்த்தியான மீசை வைத்து இருந்த அனில் கும்ப்ளே பந்து வீச வந்தார்.சீட்டு கட்டுகள் சரிவது போல அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கட்டுகள் சரிந்தன. ஒரே இன்னிங்க்சில் பத்து விக்கட்டுகள். ஒரு புதிய சாதனை பிறந்தது. இந்தியாவில் பந்து வீச்சாளர்கள் என்றாலே கபில் என்றொரு மாயை இருண்டது. அதனை தனது மட்டையால் மாற்றி காட்டியவர் சச்சின் என்றால் பந்து வீச்சில் மாற்றியவர் அனில். இடது கையால் அவர் பந்தை மேலே தூக்கி போட்டு சுற்றும் போதே எதிராளியின் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். அதே போன்று அனில் போட வர மாட்டாரா என்று ரன் தாகம் எடுக்க வீரர்கள் காத்திருந்ததும் உண்டு. தாதா கங்கூலி அறிவிப்பை தொடர்ந்து அணிலும் இன்று தனது விலகல் முடிவை வெளியிட்டு இருக்கிறார். மாற்றம் உலக நியதி. இனி கையில் மைக்கோடு அனிலை விரைவில் பார்க்கலாம்.

உண்மை உண்மையை தவிர வேறொன்றில்லை

என்னுடைய பதிமூன்றாவது வயதிலிருந்து மௌன்ட் ரோடு என்று அழைக்கப்படும் அண்ணா சாலையில் பயணித்து கொண்டு இருக்கிறேன்.அசோகர் சாலையின் இருமருங்கிலும் மரங்களை நட்டார் என்ற பள்ளி பாடத்தை மறு பரிசீலனைக்கு ஆளாக்கும் சினிமா விளம்பரங்களை கண்டு இருக்கிறேன். அரசின் அதிரடி அறிவிப்பிற்கு பிறகு கடிவாளம் கழட்டிய குதிரையாக அகண்ட சாலையை அகல கண்ணால் அளந்து இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அண்ணா மேம்பாலம் ஏறுவதற்கு முன்னர் நான் கண்டு வியக்கும் விளம்பரம் சிபிசில் நிறுவனத்தின் விளம்பரம் தான் மகாத்மா காந்தியுடைய பொன்மொழிகளை அழகான கார்டூனோடு எழுதி இருப்பார்கள். தற்போதுள்ள வாசகம் நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவர்க்கும் பொதுவான ஒன்று. என்னுடைய முதல் பதிவாக இதை எழுதுவதில் சந்தோசம்.
There is no God, higher than Truth.